துணுக்குகள்.  குடி அரசு - செய்தி விளக்கம் - 01.03.1931

Rate this item
(0 votes)

நாம் அதிகம் துன்பமடைவதற்கு, நமது அறியாமையே முக்கிய காரணமாகும். ஏனெனில், நாம் எக்காரியத்தையும் கொஞ்சமேனும் முதலில் ஆலோசியாமல் செய்வதுமன்றி, நமது அறிவையும் உபயோகிப்பதில்லை" யென ஓர் பெரியார் உரைத்திருக்கின்றார். ஆனால், நமது மதமோ, நம்முடைய அறிவை உபயோகித்து. ஆலோசனை புரிய இடங்கொடுக்க மறுக்கின்றதுடனல்லாமல் புரோகிதர்களும், மடாதிபதிகளும், குருக்களும் கூறு பவைகளை அப்படியே கண்மூடித்தனமாகவும், சுலபமாகவும் நம்பிக் கொள்ளும்படி நம்மை வற்புறுத்தியும், அப்படி நம்பினவர்களுக்குத் தான் மோட்சலோகம் சித்திக்குமெனவும் கட்டளையிடுகின்றது. இதனால், அறிவை உபயோகித்து ஆலோசிக்கின்றவர்களுக்கும், அவர்கள் உரைக்கும் மோட்ச லோகத்திற்கும் அதிக தூரம் ஏற்பட்டுவிடுகின்றது. இக்காரணத்தாலேயே மடாதிபதிகளும், குருக்களும், புரோகித கூட்டங்களும் அறிவுள்ள மானிடர்களை அபாயக்காரர்களென நினைத்து, எப்பொழுதும் அத்தகை யோரை கருவருக்க வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டே வந்திருக்கின்றார்கள். அறிவில்லாதவர்களையும், யோசியாமல் கண்மூடித்தனமாக உரைப்பனவெல்வாம் உண்மையேயென நம்பிக்கொள்ளுகின்றவர்களையும், சுலபமாகவே அடக்கி, ஆண்டு வரமுடியுமென அம்மடாதிபதி முதலியவர்கள் நாளா வட்டத்தில் அறிந்துகொண்டுமிருக்கின்றார்கள். ஏனெனில், அம்மடாதிபதி களுக்கு இத்தகைய மானிடர்களால் அளவற்ற நன்மைகள் உண்டாயிருக்கின்றது. இம்மடாதிபதி முதலியவர்களின் முன்னோர்கள், இக்காரணத்தால், முன் சாக்கிரதையாகவே தாங்களும் தங்களுடைய சந்ததியாரும் சுகமாகவும், கவலையின்றியும் காலத்தைக் கழிப்பதற்காக, மற்ற மனிதர்களின் அறிவை நாசமாக்கி விட்டார்கள். 

“சந்திரனில் தோன்றப்படும் மனிதர்களின் முகங்கள் கருத்தும், விகாரமாயுமிருப்பதாக” ஓர் வானசாஸ்திரி உரைக்கின்றார். அப்படியானால், நமது புராணங்களும், சாஸ்திரங்களும் ஆபாசமாயிருப்பதைப்பற்றி (அதா வது பொய், வஞ்சனை, சூது, கொலை, விபசாரம் முதலியவைகள் நிறைந்தி ருப்பதைப்பற்றி நாம் ஆச்சரியமடைய வேண்டியதில்லை. ஏனெனில், நமது புராணங்கள் யாவும் விண்ணுலகின் பெருமையைப்பற்றி வர்ணிப்பதில் கொஞ்சமேனும் அஞ்சவில்லை. ஆனால், அதற்கு மிதற்கும் சம்மந்த மெப்படியெனில், மதம் என்பது ஓர் வித பைத்தியம், பைத்தியத்துக்கும் சந்திரனுக்கும் கர்ண பரம்பரையான சம்பந்தமும், தொடர்ச்சியும் எப்பொழுதும் இருந்துகொண்டே வந்திருக்கின்றது இருந்து கொண்டு மிருக்கின்றது. 

“புராணங்களும், இதிகாசங்களும். பொதுவாகவே கலப்பற்றதும். பரிசுத்தமுமான கட்டுக்கதைகள்”யென ஓர் பேரறிஞர் கூறியிருக்கின்றார். அட்டடியானால், நமது புராணங்களில் காணப்படும் கதைகளும் இவ்விதியின் கீழ் அடங்குமாயென ஓர் சந்தேகம் நமக்கு உதிக்கலாம். ஆனால், ஆழ்ந்து கவனித்தோமேயானால், புராணங்களிலுள்ள கதைகள்யாவும், ஒன்று உண்மையாகவே பரிசுத்தமான கட்டுக்கதைகளாகவாவதிருக்க வேண்டும். அல்லது அவைகள்யாவும் அசுசியான உண்மைகளாகவாவ திருக்க வேண்டும். அப்படி அவைகள் பரிசுத்தமான கட்டுக்கதைகள் அல்ல வென்றும், அல்லது அசுசியான உண்மைகள் அல்லவென்றும் கூறினால், பிறகு அவைகள் யாவும் உண்மையாகவே மிக்க ஆபாசமும். அபத்தமும், அசங்கியமுமான கற்பனைகளாகவாவதிருக்கவேண்டும். 

குடி அரசு - செய்தி விளக்கம் - 01.03.1931

Read 22 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.